10 P | திருப்பூர் மாவட்டம்
Register No.: 10510
காலாண்டுத் தேர்வு - 2026
10-ஆம் வகுப்பு — தமிழ்
நேரம் : 3.00 மணி
மதிப்பெண்கள் : 100
குறிப்புகள் : i) இந்த வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I
மதிப்பெண்கள் : 15
பிரிவு - 1: i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினைச் சேர்த்து எழுதவும். (15 × 1 = 15)
1. 'இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும் கசகசத்த உயிரினங்கள்' — நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பினை எடுத்து எழுதுக.
அ) வனத்தின் நடனம்
ஆ) காற்றின் பாடல்
இ) மொட்டின் வருகை
ஈ) உயிர்ப்பின் ஏக்கம்
2. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
3. சிவப்புச் சட்டை பேசினார் என்பது _______
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
4. மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, 'இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்' என்று கூறுவது —
அ) திணை வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) இடவழுவமைதி
ஈ) கால வழுவமைதி
5. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் —
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
6. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
7. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது —
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழி
8. 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு' — இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை:
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
9. இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
10. காசிக்காண்டம் என்பது _______
அ) காசிநகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
11. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது _______
அ) இடைச்சொல் தொடர்
ஆ) வேற்றுமைத் தொடர்
இ) உரிச்சொல் தொடர்
ஈ) அடுக்குத்தொடர்
பாடலைப் படித்துப் பின்வரும் (12, 13, 14, 15) வினாக்களுக்கு விடை தருக:
"சன்னிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சேர்ந்தோர்
நல்நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகழக் கேட்டுச்
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிதும் முடி துளக்கான் ஆகி."
12. இப்பாடல் இடம்பெற்ற நூல் :
அ) காசிக் காண்டம்
ஆ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
இ) திருவிளையாடற் புராணம்
ஈ) கண்ணதாசன் கவிதைகள்
13. சந்நிதியில் வீழ்ந்து எழுந்தவர் _______
அ) இறைவன்
ஆ) குலேச பாண்டிய மன்னன்
இ) கபிலர்
ஈ) இடைக்காடனார்
14. நகுதார் வேம்பன் யார்?
அ) குலேச பாண்டியன்
ஆ) இடைக்காட்டுப் புலவர்
இ) கபிலர்
ஈ) இறைவன்
15. இப்பாடலின் ஆசிரியர்:
அ) கீரந்தையார்
ஆ) பரஞ்சோதி முனிவர்
இ) குமரகுருபரர்
ஈ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பகுதி - II
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 21-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (4 × 2 = 8)
16. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?
17. விடைகளுக்கு ஏற்ற வினாக்கள் அமைக்க:
அ) கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.
18. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
19. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
20. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
21. 'தரும்' என முடியும் திருக்குறளை அடி மாறாமல் எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. (5 × 2 = 10)
22. "வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்கு செல்கிறேன்" — இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
23. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக:
அ) ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஆ) நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக: கிளர்ந்த
25. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) அளவுக்கு _______ |
ஆ) ஒரு பானை _______
26. இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக: அ) Hospitality ஆ) Multimedia
27. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க: (தொடுத்தல், தொடுதல்)
காற்றின் மெல்லிய _______ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _______ பூக்களை மாலையாக்குகிறது.
28. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக:
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
ஆ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
பகுதி - III
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. (2 × 3 = 6)
29. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை அளிக்க:
"தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியனார் அன்றே கூறியுள்ளார்."
அ) விருந்தினர் என்போர் யாவர்?
ஆ) விருந்து குறித்துத் தொல்காப்பியர் கூறியது யாது?
இ) இவ்வுரைப் பகுதிக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
31. பல துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. (குறிப்பு : 34-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.) (2 × 3 = 6)
32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.
33. வைத்திநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) 'புண்ணியப் புலவீர்' எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணப் பாடல்.
(அல்லது)
ஆ) 'விருந்தினனாக ஒருவன்' எனத் தொடங்கும் காசிக் காண்டம் பாடல்.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. (2 × 3 = 6)
35. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் நாம் அறிவோம். இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. உவமை அணியைச் சான்று தந்து விளக்குக.
37. "நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், 'இலட்சுமி கூப்பிடுகிறாள், போய்ப்பார்' என்றார். 'இதோ சென்றுவிட்டேன்' என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, 'என்னடா விளையாட வேண்டுமா' என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், 'நீயும் இவனும் விளையாடுங்கள்' என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட லட்சுமி தொட்டியில் இருந்த நீரைக் குடித்தாள்." — இப்பத்தியில் உள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
பகுதி - IV
மதிப்பெண்கள் : 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. (5 × 5 = 25)
38. அ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக:
"கவிஞன் யானோர் காலக்கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நான் ஒரு புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி என்றால் இயம்புவதென் தொழில்
இவைதவறாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!" — கண்ணதாசன்
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
39. அ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத் திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் தெருவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளைச் சரி செய்ய ஆவன செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. செல்வி. அமுதா, வயது 20, த.பெ. முருகன் என்பவர் 24, வள்ளலார் நகர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் என்ற முகவரியில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார் எனில் தேர்வர் தம்மை அமுதாவாகப் பாவித்து உரிய படிவத்தை நிரப்புக.
42. அ) ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது. இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"The golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds thought twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant."
[குறிப்பு: செவி மாற்றுத்திறனாளருக்கான மாற்று வினா — பத்தியைப் படித்துக் கருத்துச் சுருக்கி எழுதுக: "பழைய சோறு: பச்சை நெல் வயலை கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவிதீயில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான்... பழைய சோறு அது கிராமத்து உன்னதம்..." - கண்ணன், பிரசாந்தி சேகரம் — அடிசில் 2017]
பகுதி - V
மதிப்பெண்கள் : 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி - பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துக்கள் - பிற துறைக் கருத்துக்கள் - தமிழுக்குச் செழுமை — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக்கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகமும், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை விவரிக்க.
45. அ) "குமரிக்கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழ் அன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவையை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்." — இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினரைப் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் — இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து கட்டுரை எழுதுக.