கடலூர் மாவட்டம்
பதிவு எண்: ____________
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026
பத்தாம் வகுப்பு — தமிழ்
நேரம் : 3.00 மணி
மதிப்பெண்கள் : 100
பகுதி - 1
மதிப்பெண்கள் : 15
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. (15 × 1 = 15)
1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது —
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
2. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் - 1. மேற்கு | ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு | ஈ) தென்றல் - 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
3. பரிபாடல் அடியில், 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
4. எழிலன் பாடி முடித்தான் என்பது _______ தொடர்
அ) வினையெச்சத்தொடர்
ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) பெயரெச்சத்தொடர்
ஈ) முற்றெச்சத்தொடர்
5. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் _______
அ) திருவள்ளுவமாலை
ஆ) நாலடியார்
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
ஈ) முதுமொழி
6. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
7. "இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சுவிடும் கசகசத்த உயிரினங்கள்" — இத்தொடருக்குப் பொருந்திய தலைப்பு:
அ) மிதக்கும் வாசம்
ஆ) காற்றின் பாடல்
இ) மொட்டின் வருகை
ஈ) உயிர்ப்பின் ஏக்கம்
8. காசிக்காண்டம் என்பது _______
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
9. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் — பொருளை வேறுபடுத்தக் காரணம்:
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
10. "பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் / கண்ணோட்டம் இல்லாத கண்" — இக்குறளில் வரும் அடி எதுகைகள்:
அ) பண்என்னாம், பாடற்
ஆ) கண்என்னாம், கண்ணோட்டம்
இ) பண்என்னாம், கண்ணோட்டம்
ஈ) இல்லாத, கண்
11. நன்மொழி என்பது _______
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
"செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்"
12. பாடல் இடம்பெற்ற நூல் —
அ) கணிச்சாறு
ஆ) காசிக்காண்டம்
இ) பரிபாடல்
ஈ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
13. பாடலின் ஆசிரியர்:
அ) பாவலரேறு
ஆ) சீவலமாறன்
இ) குமரகுருபரர்
ஈ) கீரந்தையார்
14. 'நின்பெருமை' — இலக்கணக்குறிப்பு:
அ) ஆறாம் வேற்றுமைத்தொகை
ஆ) ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
15. 'வேறார்' எனும் சொல் பின்வருபவருள் யாருக்குப் பொருந்தும்?
அ) ஔவையார்
ஆ) கம்பர்
இ) வீரமாமுனிவர்
ஈ) இளங்கோவடிகள்
பகுதி - 2
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாய வினா) (4 × 2 = 8)
16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
ஆ) நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன.
17. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
18. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
19. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
20. செங்கீரைப் பருவம் என்பது யாது? விளக்குக.
21. 'விடல்' என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (5 × 2 = 10)
22. பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
23. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக:
அ) நாற்றிசையும் செல்லாத நாடில்லை
ஆ) ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக: அமர்ந்தான்
25. கலைச்சொல் தருக: அ) Tempest ஆ) Human Resource
[குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (சோறு, கற்றல், கரு, பூவில், அழகு)
அ) கல் சிலை ஆகுமெனில், நெல் _______ ஆகும்.
ஆ) விதைக்குத் தேவை எருவெனில், கதைக்குத் தேவை _______]
26. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:
அ) நாலெழுத்தில் கண் சிமிட்டும்; கடையிரண்டில் நீந்திச் செல்லும்.
ஆ) இருக்கும் போது உருவமில்லை; இல்லாமல் உயிரினம் இல்லை.
27. 'பார்த்து எழுதினான்' என்பது விரைவு காரணமாக 'பார்த்துப் பார்த்து எழுதினான்' என அடுக்குத்தொடரானது. 'வளைந்து சென்றார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
28. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க: விடு - வீடு
பகுதி - 3
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: (2 × 3 = 6)
29. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இது போல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களை எழுதுக.
30. வாழை இலையில் விருந்து பரிமாறும் முறை குறித்து உமது பாடப்பகுதி விளக்குவது யாது?
31. பத்தியைப் படித்து விடை தருக!
"பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது."
அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
இ) 'பெய்த மழை' — இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: (34 கட்டாய வினா) (2 × 3 = 6)
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
33. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "அன்னை..." எனத்தொடங்கி "...பேரரசே" என முடியும் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) "புண்ணிய..." எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: (2 × 3 = 6)
35. "நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் / நச்சு மரம்பழுத் தற்று" — இக்குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
36. "அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது — இவை அனைத்தையும் யாம் அறிவோம்." — அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றுக.
37. "மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதில் ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்." — இப்பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
பகுதி - 4
மதிப்பெண்கள் : 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: (5 × 5 = 25)
38. அ) 'ஆள்வினை உடைமை' குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.
(அல்லது)
ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
39. அ) 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) அடுமனை ஒன்றில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கை நிறமூட்டிகள் கலந்து உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுவது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (மனிதர் ஒருவர் முகக்கவசம் மற்றும் முதுகில் செடியுடன் கூடிய பிராணவாயு உருளையைச் சுமந்து நிற்கும் காட்சி)
41. இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், கபிலன் தெரு, 6 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வெற்றிவேந்தனின் மகன் முத்துக்குமரன் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிளை நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை முத்துக்குமரனாக எண்ணி கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) பள்ளியிலும், வீட்டிலும் உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை எழுதுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant."
[குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக: "திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்... அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும் பொருட்பாலில் 70 அதிகாரங்களும் இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களுமாக 133 அதிகாரங்கள் உள்ளன..." i) திருக்குறள் சிறந்த நூல் என்பதற்கு ஒரு காரணம்? ii) பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்? iii) அறத்துப்பாலின் இயல்கள்? iv) 'கற்பியல்' எந்தப் பிரிவில் உள்ளது? v) தலைப்பு தருக.]
பகுதி - 5
மதிப்பெண்கள் : 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்க: (3 × 8 = 24)
43. அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
44. அ) 'பிரும்மம்' கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
(அல்லது)
ஆ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
45. அ) "குமரிக் கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் புலவர்கள்." — இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துகள் - பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
நூலக உறுப்பினர் படிவம்
மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய / கிளை / ஊர்ப்புற நூலகம்
உறுப்பினர் சேர்க்கை அட்டை
அட்டை எண்: ____________
உறுப்பினர் எண்: ____________
| 1. பெயர் | : __________________________________________________ |
| 2. தந்தை பெயர் | : __________________________________________________ |
| 3. பிறந்த தேதி | : __________________________________________________ |
| 4. வயது | : __________________________________________________ |
| 5. படிப்பு | : __________________________________________________ |
| 6. தொலைபேசி எண் | : __________________________________________________ |
| 7. அஞ்சல் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) | : __________________________________________________ __________________________________________________ |
நான் ____________ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத் தொகை ரூ. ____________, சந்தா தொகை ரூ. ____________ ஆக மொத்தம் ரூ. ____________ பணமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.
இடம் : ____________
நாள் : ____________
தங்கள் உண்மையுள்ள,
____________________
(உறுப்பினர் கையொப்பம்)
பிணைப்பாளர் உறுதிமொழி
திரு / திருமதி / செல்வி / செல்வன் ________________________ அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்றளிக்கிறேன்.
அலுவலக முத்திரை
பிணைப்பாளர் கையொப்பம் : ____________________
பதவி மற்றும் அலுவலகம் : ____________________
(மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி / மாநகராட்சி / ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள்)