செங்கல்பட்டு மாவட்டம் | தேர்வு எண் : ____________
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026-27
வகுப்பு : 10 — தமிழ்
நேரம் : 3.00 மணி
மொத்த மதிப்பெண்கள் : 100
குறிப்புகள் : i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I
மதிப்பெண்கள் : 15
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினைச் சேர்த்து எழுதவும். (15 × 1 = 15)
1. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும், பேரொலியையும்
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை:
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
3. மலர்க்கை — இச்சொல்லின் தொகையைத் தேர்க:
அ) பண்புத்தொகை
ஆ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உவமைத்தொகை
4. இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
5. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது:
அ) இட வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி
6. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்:
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
7. காட்டு விலங்குகளைச் _______ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் _______ திருந்த உதவுகிறது. — தொடருக்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தேர்க:
அ) சுடுதல்; சேகரித்தல்
ஆ) சுட்டல்; சுடுதல்
இ) செல்லுதல்; சொல்லுதல்
ஈ) சுடுதல்; சுட்டல்
8. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது:
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
9. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க:
அ) கொண்டல் - 1. மேற்கு | ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு | ஈ) தென்றல் - 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
10. 'கேட்க வேண்டிய பாடல்' என்ற தொடரில் தடித்த தொடரின் வகையைத் தேர்க:
அ) வினையெச்சம்
ஆ) இடைச்சொல் தொடர்
இ) கூட்டுநிலைப் பெயரெச்சம்
ஈ) உரிச்சொல் தொடர்
11. 'பழம்' என்ற சொல்லின் கூட்டப் பெயரைத் தேர்க:
அ) கட்டு
ஆ) குலை
இ) குவியல்
ஈ) தாறு
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக:
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
12. பாடல் இடம்பெற்ற நூல்:
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) பரிபாடல்
ஈ) பதிற்றுப்பத்து
13. இப்பாடலை இயற்றியவர்:
அ) கீரந்தையார்
ஆ) குலசேகராழ்வார்
இ) அதிவீரராம பாண்டியர்
ஈ) பெருங்கௌசிகனார்
14. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைக் கண்டறிக:
அ) கரு வளர் - உரு அறிவாரா
ஆ) உரு அறிவாரா - உந்து வளி
இ) விசும்பில் - கரு வளர்
ஈ) கிளர்ந்த - வானத்து
15. 'விசும்பு' என்ற சொல்லின் பொருள்:
அ) மழை
ஆ) காற்று
இ) வானம்
ஈ) நீர்
பகுதி - II
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
II. எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (4 × 2 = 8)
16. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக:
அ) நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் உணவும் கொடுத்தனர்.
ஆ) உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் தேவநேயப் பாவாணர்.
18. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
19. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
20. "தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி" என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
21. 'முயற்சி' — எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. கலைச்சொல் தருக: அ) Feast ஆ) Multimedia
[குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — புதிர்களுக்கான விடைகளை எழுதுக:
அ) பழைமைக்கு எதிரானது; எழுதுகோலில் பயன்படும் | ஆ) இருக்கும்போது உருவமில்லை; இல்லாமல் உயிரினம் இல்லை]
23. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) விருந்தும் _______ |
ஆ) ஒரு பானை _______
24. நட, வாழ் என்ற வினையடிகளின் தொழிற்பெயர்களை எழுதுக.
25. பகுபத உறுப்பிலக்கணம் தருக: அமர்ந்தான்
26. கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
27. குழந்தையே வா! அரசே தருக! — விளித்தொடர்களுக்கேற்ற வினையெச்சத் தொடர்களை எழுதுக.
28. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் — இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
பகுதி - III
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
III. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
"ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது, 'விளக்குவது' (Interpreting) என்று சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்."
அ) பேசும்போதே மொழிபெயர்ப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆ) காதணிகேட்பியின் பயன்பாடு பற்றி எழுதுக.
இ) மொழிபெயர்ப்பின் நன்மை ஒன்றைக் குறிப்பிடுக.
30. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
31. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். வினா எண் 34-க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (2 × 3 = 6)
32. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
33. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "மாற்றம்!" எனத் தொடங்கும் 'காலக்கணிதம்' பாடல்.
(அல்லது)
ஆ) "புண்ணியப் புலவீர்" எனத் தொடங்கும் 'திருவிளையாடற் புராணம்' பாடல்.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' — இவை அனைத்தையும் யாம் அறிவோம். இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. "மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர், சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்." — பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
37. பின்வரும் திருக்குறளை அலகிட்டு வாய்பாடு காண்க:
"அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்."
பகுதி - IV
மதிப்பெண்கள் : 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி. (5 × 5 = 25)
38. அ) இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
(அல்லது)
ஆ) வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
39. அ) உங்கள் பகுதிக்கு நூலக வசதி வேண்டி, பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்கப்பட்ட உணவுப்பொருள் உறையில் குறிப்பிட்ட நாளைத் தாண்டியதாக இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (மனிதர் ஒருவர் முகக்கவசம் மற்றும் முதுகில் செடியுடன் கூடிய பிராணவாயு உருளையைச் சுமந்து நிற்கும் காட்சி)
41. எண் 19, திருவள்ளுவர் தெரு, கம்பர் நகர், பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் அருளரசு என்பவரின் மகள் கவிதா பத்தாம் வகுப்பு படிக்கிறார். அவர், மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர், தன்னைக் கவிதா எனக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்துகொள்ளும் நற்செயல்களைப் பட்டியலிடுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"The golden Sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful Birds Start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers Fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant."
[குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்றுவினா — உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்:
"தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்... 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்... அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர். அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்கிறது புறநானூறு." — வினாக்கள்: 1. பண்டைய தமிழரின் விருந்தோம்பல் பற்றி எவற்றின் வாயிலாக அறிகிறோம்? 2. "விருந்தே புதுமை" என்று குறிப்பிடும் நூல் எது? 3. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது? 4. புறநானூற்றில் குறிப்பிடப்படும் விருந்தோம்பல் செய்தி யாது? 5. தற்கால விருந்தோம்பல் குறித்து உங்கள் கருத்து ஒன்றை எழுதுக.]
பகுதி - V
மதிப்பெண்கள் : 24
V. அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) நாட்டு வளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துக்கள் - பிற துறைக் கருத்துக்கள் - தமிழுக்குச் செழுமை — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) 'பிரும்மம்' கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
45. அ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக:
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
(குறிப்புகள் : நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்)
(அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி "இயற்கையைக் காப்போம்" என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக:
(குறிப்புகள்: முன்னுரை - மானுடமும் இயற்கையும் - சுற்றுச்சூழல் மாசுபாடு விளைவுகள் - இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் வழிமுறைகள் - முடிவுரை)