10th Science Quarterly Exam 2026 Question Paper & Answer Key | Madurai District (TM)

மதுரை மாவட்ட 10ஆம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு 2026 வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளைப் பதிவிறக்குங்கள். Download 10th Science Quarterly

மதுரை மாவட்ட 10ஆம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு 2026 வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை (10th Science Quarterly Exam 2026 Question Paper & Answer Key) தமிழ் வழி மாணவர்களுக்காக இந்தப் பக்கத்தில் துல்லியமாகத் தொகுத்து வழங்கியுள்ளோம். மாணவர்கள் இந்த அதிகாரப்பூர்வ வினாத்தாளைப் பயன்படுத்திப் பயிற்சி செய்வதன் மூலம், வினாக்களின் கடினத்தன்மை மற்றும் முக்கியப் பகுதிகளை அறிந்து கொண்டு வரவிருக்கும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.


10th Science Quarterly Exam 2026 Question Paper & Answer Key | Madurai District (TM)

QMD • மதுரை மாவட்டம் 10-ஆம் வகுப்பு பதிவு எண்: [__________]

காலாண்டுத் தேர்வு - 2026

அறிவியல் (தமிழ் வழி) • வினாத்தாள் மற்றும் விரிவான விடைக்குறிப்பு
காலம்: 3.00 மணி மதிப்பெண்கள்: 75
பகுதி - I • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 12 × 1 = 12

1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
அ) பொருளின் எடை      ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்      இ) பொருளின் நிறை      ஈ) அ மற்றும் ஆ

விடை: இ) பொருளின் நிறை
விளக்கம்: ஒரு பொருளின் நிறை அதிகமாக இருந்தால் அதன் நிலைமமும் அதிகமாக இருக்கும்; நிலைமம் என்பது பொருளின் நிறையை மட்டுமே சார்ந்தது.

2. ஒரு லென்சின் திறன் −4D எனில் அதன் குவியத்தொலைவு:
அ) 4 மீ      ஆ) −40 மீ      இ) −0.25 மீ      ஈ) −2.5 மீ

விடை: இ) −0.25 மீ
தீர்வு: குவியத்தொலைவு f = 1 / P = 1 / (−4) = −0.25 மீ.

3. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?
அ) மின் தடை எண்      ஆ) மின் கடத்து திறன்      இ) மின் ஆற்றல்      ஈ) மின் திறன்

விடை: இ) மின் ஆற்றல்
விளக்கம்: 1 kWh என்பது நுகரப்படும் மின்னாற்றலின் வணிக ரீதியான அலகு ஆகும் (1 kWh = 3.6 × 106 J).

4. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை:
அ) 16 கி      ஆ) 18 கி      இ) 32 கி      ஈ) 17 கி

விடை: இ) 32 கி
விளக்கம்: ஆக்சிஜன் மூலக்கூறு O2 = 2 × 16 = 32 கி.

5. நவீன ஆவர்த்தன அட்டவணையில் இரண்டாம் தொகுதி உலோகங்கள் _______ என்று அழைக்கப்படுகின்றன:
அ) போரான் குடும்பம்      ஆ) கார்பன் குடும்பம்      இ) காரமண் உலோகங்கள்      ஈ) கார உலோகங்கள்

விடை: இ) காரமண் உலோகங்கள்

6. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம்:
அ) ஈரம் மீது அதிக நாட்டம்      ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம்
இ) ஈரம் மீது நாட்டம் இன்மை      ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை

விடை: அ) ஈரம் மீது அதிக நாட்டம்

7. கிரப் சுழற்சி _______ இல் நடைபெறுகிறது:
அ) பசுங்கணிகம்      ஆ) மைட்டோகாண்ட்ரியா உட்கூழ்மம் (மேட்ரிக்ஸ்)
இ) புறத்தோல் துளை      ஈ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச் சவ்வு

விடை: ஆ) மைட்டோகாண்ட்ரியா உட்கூழ்மம்

8. சின்கேமியின் (இணைவு) விளைவால் உருவாவது:
அ) சூஸ்போர்      ஆ) கொனிடியா      இ) சைகோட்      ஈ) கிளமிடோமோனாஸ்

விடை: இ) சைகோட்
விளக்கம்: ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைவதால் உருவாகும் இரட்டைமய செல் கருமுட்டை (சைகோட்) ஆகும்.

9. எந்த நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
அ) பிரிதல்      ஆ) குறுக்கே கலத்தல்      இ) சார்பின்றி ஒதுங்குதல்      ஈ) ஓங்கு தன்மை

விடை: இ) சார்பின்றி ஒதுங்குதல்

10. தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்படுவது:
அ) ஆக்சின்      ஆ) அப்சிசிக் அமிலம்      இ) எத்திலீன்      ஈ) ஜிப்ரல்லின்

விடை: ஆ) அப்சிசிக் அமிலம் (ABA)

11. மூளையின் கடத்து மையமாக செயல்படுவது:
அ) தலாமஸ்      ஆ) பான்ஸ்      இ) முகுளம்      ஈ) ஹைப்போதலாமஸ்

விடை: அ) தலாமஸ்

12. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
அ) பிளாஸ்மா = இரத்தம் + லிம்போசைட்      ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC      ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்தத்தட்டுகள்

விடை: ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்தத்தட்டுகள்
பகுதி - II • எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும் (வினா எண் 22 கட்டாய வினா): 7 × 2 = 14

13. பரும விதியைக் கூறுக (சார்லஸ் விதி).

விடை:
மாறா அழுத்தத்தில், குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் பருமன் (V) அவ்வாயுவின் வெப்பநிலைக்கு (T) நேர்த்தகவில் அமையும்.
V ∝ T அல்லது V / T = மாறிலி.

14. அணுக்கட்டு எண் என்றால் என்ன?

விடை:
ஒரு மூலக்கூறில் அடங்கியுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் 'அணுக்கட்டு எண்' எனப்படும் (எ.கா: ஆக்சிஜன் O2 = 2, ஓசோன் O3 = 3).

15. இரசக்கலவை என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுத் தருக.

விடை:
உலோகமும் பாதரசமும் (Hg) கலந்து உருவாகும் உலோகக் கலவை இரசக்கலவை எனப்படும்.
எடுத்துக்காட்டு: சில்வர் - டின் (Ag-Sn) இரசக்கலவை (பற்குழிகளை அடைக்கப் பயன்படுகிறது).

16. சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?

விடை:
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும் போது கரைசலின் வெப்பநிலை குறைகிறது. வெப்பநிலை குறையும் போது திரவத்தில் காப்பர் சல்பேட்டின் கரைதிறன் குறைகிறது. எனவே, அதிகப்படியான கரைபொருள் கரைசலில் இருந்து பிரிந்து நீல நிற படிகங்களாக மாறுகிறது.

17. சுவாச ஈவு என்றால் என்ன?

விடை:
சுவாசத்தின் போது வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கும், எடுத்துக்கொள்ளப்படும் ஆக்சிஜன் அளவிற்கும் இடையே உள்ள விகிதமே சுவாச ஈவு (RQ) எனப்படும்.
சுவாச ஈவு = வெளியிடப்படும் CO2 அளவு / எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு.

18. முயலின் பல் வாய்ப்பாட்டை எழுதுக.

விடை:
(I 2/1, C 0/0, PM 3/2, M 3/3) அல்லது 2033 / 1023.

19. இச்சை செயல் மற்றும் அனிச்சை செயல் - வேறுபடுத்துக.

இச்சை செயல் அனிச்சை செயல்
நமது சுய விருப்பம் மற்றும் சிந்தனைக் கட்டுப்பாட்டின் கீழ் நடக்கும் செயல். தூண்டலுக்குப் பதிலாக விருப்பமின்றியே தன்னிச்சையாக நடக்கும் உடனடி எதிர்வினை.
மூளையின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. தண்டுவடத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது.
மிக வேகமாக நடைபெற வேண்டிய அவசியமில்லை. மிக விரைவாக உடனடியாக நடைபெறும்.
எ.கா: நடத்தல், சாப்பிடுதல், எழுதுதல். எ.கா: தும்முதல், சூடான பொருளைத் தொட்டவுடன் கையை விலக்குதல்.

20. போல்டிங் என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?

விடை:
நெருங்கிய இலையடுக்கு கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லினைத் தெளிக்கும் போது தண்டுப்பகுதி திடீரென அசாதாரணமாக நீட்சியடைவதும் அதைத் தொடர்ந்து மலர்தலும் நிகழ்கின்றன; இந்நிகழ்வு 'போல்டிங்' எனப்படும். இதனை செயற்கையாக ஜிப்ரல்லின் ஹார்மோனைத் தெளிப்பதன் மூலம் தூண்டலாம்.

21. கொடுக்கப்பட்டுள்ள மகரந்தத்தூளின் படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்:
[படம்: மகரந்தத் தூளின் குறுக்குவெட்டுத் தோற்றம்]

விடை:
A — வெளியுறை (எக்ஸைன்)
B — உள்உறை (இன்டைன்)
C — உற்பத்தி செல்
D — உடல உட்கரு

22. [கட்டாய வினா] 10 கூலும் மின்னூட்டத்தை ஒரு மின்சுற்றிலுள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையே நகர்த்த செய்யப்படும் வேலை 100 J எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்ன?

தீர்வு:
கொடுக்கப்பட்டவை: மின்னூட்டம் Q = 10 C, செய்யப்பட்ட வேலை W = 100 J
மின்னழுத்த வேறுபாடு V = W / Q = 100 / 10 = 10 வோல்ட் (V).
பகுதி - III • எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும் (வினா எண் 32 கட்டாய வினா): 7 × 4 = 28

23. பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டை விவரி (ஏதேனும் நான்கு).

விடை:
1. அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்கள் மற்றும் நிறைகளை அளவிட உதவுகிறது.
2. புவியின் நிறை, ஆரம் மற்றும் புவியீர்ப்பு முடுக்கம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது.
3. புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களைக் கண்டறியப் பயன்படுகிறது.
4. விண்மீன்களின் சீரற்ற நகர்வை ஆய்வு செய்து அருகிலுள்ள பிற கோள்களின் நிறையை அளவிடவும், விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்யவும் பயன்படுகிறது.
5. தாவரங்களின் வேர் முளைத்தல் புவிஈர்ப்பு சார்பசைவு சார்ந்தது என்பதை விளக்க உதவுகிறது.

24. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.

கிட்டப்பார்வை (மையோபியா) தூரப்பார்வை (ஹைப்பரோபியா)
அருகிலுள்ள பொருட்களைக் காண முடியும்; தொலைவில் உள்ளவற்றைக் காண முடியாது. தொலைவிலுள்ள பொருட்களைக் காண முடியும்; அருகில் உள்ளவற்றைக் காண முடியாது.
விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது. விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படுகிறது.
விழி லென்சின் குவியத் தூரம் குறைவதால் ஏற்படுகிறது. விழி லென்சின் குவியத் தூரம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
விழி லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிக்கிறது. விழி லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு குறைகிறது.
தகுந்த குவியத் தூரமுடைய குழி லென்சு பயன்படுத்தி சரிசெய்யலாம். தகுந்த குவியத் தூரமுடைய குவி லென்சு பயன்படுத்தி சரிசெய்யலாம்.

25. அ) பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன? ஆ) ஓம் விதி - வரையறு.

விடை:
அ) பரும வெப்ப விரிவு குணகம்: ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் எனப்படும். இதன் அலகு K−1.
ஆ) ஓம் விதி: மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் (I) கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு (V) நேர்த்தகவில் அமையும் (V = IR).

26. அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கிடையேயான பிணைப்பு எது? ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது? இ) அப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு மாறுபடுகிறது?

விடை:
அ) சகப்பிணைப்பு (முனைவுற்ற சகப்பிணைப்பு)
ஆ) எலக்ட்ரான் கவர் தன்மை
இ) எலக்ட்ரான் கவர் தன்மை பண்பானது தொடரில் இடமிருந்து வலமாக அதிகரிக்கும்; தொகுதியில் மேலிருந்து கீழாகக் குறையும்.

27. அ) ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக. ஆ) (i) அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை (ii) இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு _______ என்று அழைக்கப்படுகிறது.

விடை:
அ) ஒளிச்சேர்க்கை சமன்பாடு:
6CO2 + 12H2O → C6H12O6 + 6H2O + 6O2↑ (சூரிய ஒளி மற்றும் பச்சையம் முன்னிலையில்)
ஆ) (i) கண்டங்களின் எண்ணிக்கை: 33 கண்டங்கள்
(ii) பண்பு: சாங்குயிவோரஸ் (இரத்த உறிஞ்சிகள்)

28. (i) இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன? (ii) பொருத்துக:
அ) நிசில் துகள்கள் — முன்மூளை
ஆ) ஹைப்போதலாமஸ் — புற அமைவு நரம்பு மண்டலம்
இ) சிறுமூளை — சைட்டான்
ஈ) ஸ்வான் செல்கள் — பின்மூளை

விடை:
(i) வால்வுகளின் முக்கியத்துவம்: இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன; இரத்தம் ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்கவும் பயன்படுகின்றன.
(ii) சரியான பொருத்தம்:
• நிசில் துகள்கள் — சைட்டான்
• ஹைப்போதலாமஸ் — முன்மூளை
• சிறுமூளை — பின்மூளை
• ஸ்வான் செல்கள் — புற அமைவு நரம்பு மண்டலம்

29. a) தைராய்டு ஹார்மோன் ஏன் ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது? b) சரியா? தவறா? எனக் கண்டறிக. தவறு எனில் திருத்தி எழுதுக: (i) எத்திலீன் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதை தடை செய்கிறது. (ii) பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளால் அமைந்துள்ளது.

விடை:
a) ஆளுமை ஹார்மோன்: தைராய்டு ஹார்மோன் மனித உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றுவதால் இது 'ஆளுமை ஹார்மோன்' எனப்படுகிறது.
b) (i) தவறு. சரியான கூற்று: எத்திலீன் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது.
(ii) தவறு. சரியான கூற்று: பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளால் (அடினோஹைப்போபைசிஸ் மற்றும் நியூரோஹைப்போபைசிஸ்) அமைந்துள்ளது.

30. பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.

விடை:
1. சூல் திசு: சூலின் முக்கியப் பகுதி சூல் திசு ஆகும்; இது இரண்டு பாதுகாப்பு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது.
2. சூல்துளை: மேல் பகுதியில் சூல் உறை இணையாமல் அமைந்த இடைவெளி சூல்துளை எனப்படும்.
3. சூல் காம்பு: சூலானது சூல் ஒட்டுத்திசுவுடன் ஒரு சிறிய காம்பின் மூலம் ஒட்டிக்கொண்டுள்ளது; இது சூல் காம்பு எனப்படும்.
4. சூலடி: சூலின் அடிப்பகுதி சூலடி (சலாசா) எனப்படும்.
5. கருப்பை: இதில் 7 செல்களும் 8 உட்கருக்களும் அமைந்துள்ளன. சூல்துளையின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள் அண்ட சாதனத்தை உருவாக்குகின்றன; மையத்தில் ஒரு செல் துருவ உட்கருக்களையும், சூலடிப் பகுதியில் மூன்று எதிரடி செல்களையும் கொண்டுள்ளது.

31. குரோமோசோமின் அமைப்பை விளக்குக.

விடை:
குரோமோசோம்கள் மெல்லிய, நீண்ட, நூல் போன்ற அமைப்புகள் ஆகும்; இதில் குரோமேட்டிடுகள் திருகு போல சுருட்டப்பட்ட குரோமோனிமா அமைப்பைக் கொண்டுள்ளன:
1. முதன்மைச் சுருக்கம் (சென்ட்ரோமியர்): இரண்டு குரோமேட்டிட் கரங்களும் இணையும் குறிப்பிட்ட புள்ளி சென்ட்ரோமியர் ஆகும்; செல் பிரிதலின் போது ஸ்பின்டில் இழைகள் இங்கு இணைகின்றன.
2. இரண்டாம் நிலை சுருக்கம்: சில குரோமோசோம்களில் காணப்படும் குறுகிய பகுதி; இது உட்கரு உருவாகும் பகுதி (உட்கரு உருவி) எனப்படுகிறது.
3. டீலோமியர்: குரோமோசோமின் இறுதி நிலைப்புத்தன்மை கொண்ட முனைகள் டீலோமியர் எனப்படும்.
4. சாட்டிலைட்: சில குரோமோசோமின் ஒரு முனையில் காணப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு சாட்டிலைட் எனப்படும்.

32. [கட்டாய வினா] a) மோல் எண்ணிக்கையைக் கணக்கிடு: 27 கி அலுமினியம். b) 100 கி நீரில் 25 கி சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன் கரைபொருளின் நிறை சதவீதத்தைக் காண்க.

தீர்வு:
a) அலுமினியத்தின் மோல் எண்ணிக்கை:
மோல்களின் எண்ணிக்கை = நிறை / அணு நிறை = 27 / 27 = 1 மோல்.

b) கரைபொருளின் நிறை சதவீதம்:
கரைபொருளின் நிறை = 25 கி, கரைப்பானின் நிறை (நீர்) = 100 கி
கரைசலின் நிறை = 25 + 100 = 125 கி
நிறை சதவீதம் = (கரைபொருளின் நிறை / கரைசலின் நிறை) × 100
= (25 / 125) × 100 = (1 / 5) × 100 = 20%.
பகுதி - IV • அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்: 3 × 7 = 21
33. நிலைமம் என்றால் என்ன? நிலைமத்தின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
நிலைமம்: ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் உள்ளார்ந்த தன்மை நிலைமம் எனப்படும்.
வகைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்:
1. ஓய்வில் நிலைமம்: நிலையாக உள்ள ஒரு பொருள் தன் ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு.
• எ.கா: மரத்தின் கிளைகளை உலுக்கும் போது இலைகளும் பழங்களும் கீழே விழுவது.
2. இயக்கத்தில் நிலைமம்: இயக்கத்தில் உள்ள பொருள் தன் சீரான இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு.
• எ.கா: நீளம் தாண்டுபவர் தாண்டுவதற்கு முன் சிறிது தூரம் ஓடிவந்து குதிப்பது.
3. திசையில் நிலைமம்: இயக்கத்திலுள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாது திசைமாற்றத்தை எதிர்க்கும் பண்பு.
• எ.கா: வாகனம் வேகமாக வளைவில் திரும்பும் போது பயணிகள் வளைவின் திசைக்கு எதிர்ப்புறம் சாய்வது.
(அல்லது) 33. அ) சாதாரண தொலைக்காட்சியை விட LED தொலைக்காட்சியின் நன்மைகள் யாவை? ஆ) LED விளக்கின் நன்மைகளைப் பட்டியலிடுக.
விடை:
அ) LED தொலைக்காட்சியின் நன்மைகள்:
1. குறைந்த ஆற்றல் மற்றும் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.
2. மிக மெல்லிய வடிவம் கொண்டது மற்றும் காட்சிகளின் வெளியீடு அதிக பிரகாசமாக இருக்கும்.
3. நீண்ட ஆயுட்காலம் கொண்டது மற்றும் நம்பகத்தன்மை அதிகம்.
ஆ) LED விளக்கின் நன்மைகள்:
1. சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
2. பல வண்ணங்களில் ஒளி வெளியீட்டினைப் பெறலாம்.
3. பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
4. குறைந்த விலை மற்றும் அதிக மின்னாற்றல் சிக்கனம் உடையது.
34. அ) நவீன அணுக் கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக (எவையேனும் ஐந்து). ஆ) துரு என்றால் என்ன? துரு உருவாவதற்கான சமன்பாட்டை எழுதுக.
விடை:
அ) நவீன அணுக் கொள்கையின் கோட்பாடுகள்:
1. அணு என்பது பிளக்கக்கூடிய துகள்.
2. வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் அணு ஆகும்.
3. அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலைக் கணக்கிட முடியும் (E = mc2).
4. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன (ஐசோடோப்புகள்).
5. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணு நிறைகளைப் பெற்றுள்ளன (ஐசோபார்கள்).
6. அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது (செயற்கை மாற்றுத் தனிமமாக்கல் சாத்தியம்).

ஆ) துரு மற்றும் சமன்பாடு:
இரும்பானது ஈரப்பதமுள்ள காற்றுடன் வினைபுரிந்து உருவாகும் பழுப்பு நிற நீரேறிய பெர்ரிக் ஆக்சைடு துரு எனப்படும்.
4Fe + 3O2 + xH2O → 2Fe2O3 · xH2O (துரு).
(அல்லது) 34. கரைதிறனைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி விரிவாக வரைக.
விடை:
1. கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை: "ஒத்தவை ஒத்தவற்றைக் கரைக்கும்". முனைவுள்ள சேர்மங்கள் முனைவுள்ள கரைப்பானிலும் (உப்பு நீரில் கரைவது), முனைவுறா சேர்மங்கள் முனைவுறாக் கரைப்பானிலும் கரையும். முனைவுறா சேர்மங்கள் முனைவுள்ள கரைப்பானில் கரைவதில்லை.
2. வெப்பநிலை:
• திண்மங்களின் கரைதிறன்: வெப்பங்கொள் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் அதிகரிக்கும்; வெப்ப உமிழ் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறையும்.
• வாயுக்களின் கரைதிறன்: திரவத்தில் வாயுக்களின் கரைதிறன் வெப்பநிலை அதிகரிக்கும் போது குறைகிறது (நீரை சூடுபடுத்தும்போது ஆக்சிஜன் குமிழ்களாக வெளியேறுதல்).
3. அழுத்தம்: அழுத்தத்தை அதிகரிக்கும் போது திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது (எ.கா: குளிர்பானங்களில் அதிக அழுத்தத்தில் CO2 அடைக்கப்படுதல்). திடப்பொருள் கரைதலில் அழுத்தத்தின் தாக்கம் இருப்பதில்லை.
35. அ) கிளைக்காலிசிஸ் நடைபெறும் இடம் யாது? ஆ) கூட்டினைவு என்றால் என்ன? இ) நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி.
விடை:
அ) கிளைக்காலிசிஸ் நடைபெறும் இடம்: சைட்டோபிளாசம்.
ஆ) கூட்டினைவு: ஒரே வகையான நீர் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை 'கூட்டிணைவு' எனப்படும்.
இ) நியூரானின் அமைப்பு (நரம்பு செல்): நியூரானில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன:
1. சைட்டான் (செல் உடலம்): பெரிகேரியோன் எனவும் அழைக்கப்படும். மையத்தில் பெரிய உட்கருவும் சைட்டோபிளாசமும் (நியூரோபிளாசம்) மற்றும் நிசில் துகள்களும் நிறைந்துள்ளன.
2. டென்ட்ரைட்டுகள்: செல் உடலத்தின் வெளியே பல கிளைத்த பகுதிகளாகக் காணப்படுகின்றன; இவை நரம்புத் தூண்டல்களை ஏற்று சைட்டானை நோக்கிக் கடத்துகின்றன.
3. ஆக்சான்: சைட்டானிலிருந்து வெளிப்படும் தனித்த, நீளமான, மெல்லிய அமைப்பு. ஆக்சானின் மேற்புறம் மையலின் உறை என்ற பாதுகாப்புக் கொழுப்பு உறையாலும், அதன் மேல் ஸ்வான் செல்களால் ஆன நியூரிடெம்மா உறையாலும் சூழப்பட்டுள்ளது. மையலின் உறையில் தொடர்ச்சியற்ற பள்ளங்கள் ரேன்வீரின் கணுக்கள் எனப்படும்.
(அல்லது) 35. அ) உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது எது? ஆ) மூவிணைவு வரையறு. இ) DNA-வின் அமைப்பு எவ்வாறு உருவாகிறது?
விடை:
அ) உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்: பாராதார்மோன்.
ஆ) மூவிணைவு: ஒரு ஆண் கேமீட் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய சைகோட்டை உருவாக்குகிறது; மற்றொரு ஆண் கேமீட் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து மும்மய முதன்மைக் கருவூண் உட்கருவை உருவாக்குகிறது; இதற்கு 'மூவிணைவு' என்று பெயர்.
இ) DNA-வின் கட்டமைப்பு (வாட்சன் & கிரிக் இரட்டைச் சுருள் மாதிரி):
1. DNA என்பது இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆன இரட்டைச் சுருள் அமைப்பாகும்.
2. இதன் முதுகெலும்பாக சர்க்கரை-பாஸ்பேட் தொடர் அமைந்து நைட்ரஜன் காரங்களோடு இணைந்துள்ளது.
3. நிரப்பு நைட்ரஜன் காரங்கள் ஹைட்ரஜன் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன: அடினைன் (A) தைமினுடன் (T) இரண்டு ஹைட்ரஜன் பிணைப்புகளாலும் (A = T), சைட்டோசின் (C) குவானைனுடன் (G) மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகளாலும் (C ≡ G) பிணைக்கப்பட்டுள்ளது.
4. DNA இரட்டைச் சுருளின் ஒவ்வொரு சுற்றும் 3.4 nm (34 Å) அளவுடையது.

10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment